கோபி அருகே விவசாய தோட்டங்களில் யானை புகுவதை தடுக்கக் கோரி மனு
Erode news- ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டு யானைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகர் மாரியப்பனிடம் மனு அளித்தனர்.
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சை துறையம்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களுக்குள் இன்று (22ம் தேதி) அதிகாலை புகுந்த காட்டு யானை விவசாய கம்பி வேலியினை உடைத்துள்ளது. மேலும், விவசாய பயிர்களை சேதம் செய்தும் வந்துள்ளது.
இதேபோல், கடந்த மூன்று நாட்களாக பங்களாபுதூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொண்டையம் பாளையம், சுண்டக்கரடு, உப்பு பள்ளம், அம்பேத்கர் காலனி எருமக்குட்டை ஆகிய வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் யானை புகுந்து சேதம் செய்து வந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், இன்று (22ம் தேதி) காலை 11 மணியளவில் 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் காட்டு யானை விவசாய தோட்டங்களுக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பங்களாப்புதூரில் உள்ள டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகம் வந்து வனச்சரகர் மாரியப்பனிடம் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் வனப்பகுதிகளில் அகழி, பென்சிங் வேலி உள்ளிட்டவற்றை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், வருகின்ற 24ம் தேதி ஈரோடு மாவட்ட வன அலுவலரை சந்தித்து மனு அளிப்பதாக கூறிய அவர்கள், 10 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் சாலை மறியல் அல்லது உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றனர்.