பெருந்துறை திருவாச்சி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு ஆட்சியர்

பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.

Update: 2024-08-15 11:45 GMT

சுதந்திர தினத்தையொட்டி திருவாச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை அருகே உள்ள திருவாச்சி ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதம்பாளையத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம் சபைக் கூட்டம் இன்று (15ம் தேதி) நடந்தது. திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தை பார்வையிட்டு கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததபோது சுதந்திர தினமான இன்று (15ம் தேதி) ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கிராம சபை கூட்டங்களில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட குக்கிராமங்களின் வரவு செலவு கணக்குகள், மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவை பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது என்றார்.


தொடர்ந்து, மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 214 கிராம ஊராட்சிகளில் முகாம்கள் 2ம் கட்டமாக நடைபெற்று வருகிறது. இதில், திருவாச்சி ஊராட்சிக்கான முகாம் வருகின்ற 22ம் தேதி நசியனூர் ஊராட்சியில் நடைபெறுகிறது. இம்முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் 30 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

இதனையடுத்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பான உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு மருந்து பெட்டகத்தினையும், 2 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு ஊட்டச்சத்துப்பெட்டகத்தினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தர்மராஜன், துணைத்தலைவர் பூவேந்திரன், பெருந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், பிரேமலதா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News