அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 4 பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வருவாய் வட்டாரத்தில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. அந்தியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்திலும், அத்தாணி உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு பேரூராட்சி திருமண மண்டபத்திலும், அம்மாபேட்டை உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு சனிசந்தை கொங்குதிருமகள் மண்டபத்திலும், பர்கூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு தாமரைக்கரையில் உள்ள சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் இலவச வீடு , பட்டா பெயர் மாற்றம், சாதிசான்று, வருமான சான்று, இருப்பிட சான்று, பிறப்பு, இறப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று, குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம், மற்றும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல் போன்ற இனங்களுக்கு உரிய படிவத்தில் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து தொடர்புடைய அலுவலரிடம் மனு செய்து சான்று பெறலாம். முகாமில் வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதால் பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கேட்டுகொண்டுள்ளார்.