நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன் பேட்டி..!

நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர் அல்ல என்று ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார்.

Update: 2024-06-14 14:45 GMT

இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் அசோகன் பேசிய போது எடுத்த படம்.

நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர் அல்ல என்று ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே டெக்ஸ்வேலி அருகில் இமயம் புற்று நோயாளிகள் காப்பம் செயல்பட்டு வருகிறது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்காப்பகம் தொடர்ந்து சேவை செய்து வருகிறது. இதுவரை 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இறுதி வாழ்க்கையை இங்கு கழித்துள்ளனர். காப்பகத்தின் 18ஆம் ஆண்டு விழா நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் இந்திய மருத்துவ சங்க தலைவர் ஆர்.வி.அசோகன் பங்கேற்றார்.

அசோகன் செய்தியாளர்களிடம் பேசும் போது, இந்திய மருத்துவ சங்கம் மூலம் கடந்த 40, 50 ஆண்டுகளாக ரத்த தானம் தானாக முன்வந்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான ரத்த வங்கிகளை உருவாக்கினோம். அகில இந்திய அளவில் எத்தனை ரத்த வங்கிகள் உள்ளது என்ற கணக்கு எங்களிடம் இல்லை. கேரளாவில் 7 ரத்த வங்கிகள் உள்ளன. கேரளாவின் தேவையில் 20 விழுக்காட்டை அது பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டில் 4 ரத்த வங்கிகள் உள்ளன.

இந்திய மருத்துவ சங்கம் 1550 கிளைகளைக் கொண்டது. சுமார் 600 கிளைகள் விழிப்புணர்வு மையங்களாகச் செயல்படும் கட்டடங்களைக் கொண்டது. அதுபோல கிளை அளவில் ஒவ்வொரு இடத்திலும் என்ன தேவை இருக்கிறது என்பதைப் பொறுத்து செயல்பட முடியும் என்று தெரிவித்தார். மருத்துவம் வணிகமயமாவது குறித்த கேள்விக்கு, 1985ல் இரண்டு நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தது. அன்று சென்னை, கோவை மருத்துவக்கல்லூரிகள் தான் சமூகத்தில் பெரிய மருத்துவமனைகளாக இருந்தன. இன்று இல்லை. அதை விட்டிருக்கக் கூடாது.

கார்ப்பரேட் மருத்துவமனைகளை விட்டிருக்கக் கூடாது. லாபத்திற்காக பங்குதாரர்களைக் கொண்டு நடத்தப்படுவது அப்படித்தான் இருக்கும். அதை கொள்கை அளவில் தடுத்திருக்க வேண்டும். இந்தத் துறையில் லாபம் உண்டாக்கும் நிறுவனங்கள் வரக் கூடாது. வந்திருக்கக் கூடாது. அது தவறு. அதை 1985ல் தடுக்காமல் விட்டுவிட்டனர். அதுபோன்ற மருத்துவமனைகள் சென்னையில்தான் முதலில் வந்தது. அது நாடு பூராவும் இன்று பரவிருக்கிறது. ஆக இதை மருத்துவமனையாக நடத்துவதா, வியாபாரமாகப் பார்ப்பதா என அரசிற்கும் புரியவில்லை.

மற்றொன்று 1993ல் நோயாளிகளை நுகர்வோர் என உச்சநீதிமன்றம் சொன்னது. அது கடைக்காரர் - வாடிக்கையாளர் உறவைப் போல மாற்றி விட்டது. இன்று வரை அது மீளவில்லை. இப்போது அதை திரும்பவும் பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த இரண்டு நிகழ்வுகளுக்குப் பிறகு தான் வன்முறை நிகழ்கிறது. அதற்கு முன்பு இல்லை. அதனை சட்டம் போட்டு மாற்ற முடியாது. ஆழமான பிரச்சனைகள் இருக்கிறது என்று கூறினார்.

அப்போது, தமிழ்நாடு மருத்துவ சங்க தலைவர் அபுல்ஹசன், இந்த வன்முறையைத் தடுப்பதற்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டம் வகுத்துள்ளோம். மக்களைச் சென்றடைவதற்கு, அவர்களின் புரிதல்களை மாற்றுவதற்கு ஒவ்வொரு கிளையிலும் மருத்துவர்கள் - குடிமக்கள், அப்பகுதியில் செயல்படும் தொண்டு நிறுவனங்களை இணைத்து செயல்படுவோம். சட்டம் போட்டு மட்டும் தடுக்க முடியாது. காவல் துறையினராலும் முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறி வருகிறது. எனவே, மக்கள் - மருத்துவர்கள் இடையே பரஸ்பர புரிதலை உருவாக்கும் மிகப் பெரிய வேலையை செய்யலாம் என தமிழ்நாடு மருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது. ஈரோட்டைப் போல வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி பகுதியில் புற்று நோய் இல்லங்கள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக அபுல் ஹசன் தனது அறிமுக உரையில், இந்தியாவில் முதல் முதலாக மருத்துவர்கள் எல்லாம் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட புற்று நோயாளிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை மையம் இமயம் காப்பகம். புற்று நோய் என்று சொல்லும்போது சிகிச்சை பலனற்று மரணத்தின் தறுவாயில் கஷ்டப்படுபவர்களுக்காக கட்டப்பட்டது இல்லம். அவர்களது வலிகளை நீக்கி மறுவாழ்விற்காக இக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. உபாதைகள் அதிகம் இல்லாமல் அமைதியாக வாழ்வதற்கு வகை செய்கிறோம் என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ சங்க உதவி தலைவர் எம்.சந்திரசேகர், செயலாளர் கார்த்திக் பிரபு, நிதி செயலாளர் கௌரி சங்கர், இமயம் காப்பக உதவி தலைவர் கண்ணம்மாள் துரைசாமி, செயலாளர் சுகுமார், நிதி செயலாளர் என்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் காப்பாளர் மருத்துவர் வேலவன், அரவிந்த குமார், மேலாளர் சக்திவேல், முருகன், பூங்கொடி ஆகியோர் பாராட்டப்பட்டனர். 

Tags:    

Similar News