சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் கனமழை: காட்டாறு வெள்ளத்தால் பீதி!
Erode news- ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி பெய்த மழையால் ஏற்பட்ட காட்டாறு வெள்ளப்பெருக்கு மலைக்கிராம மக்களை பீதி அடைய செய்தது.;
Erode news, Erode news today- கடம்பூர் மலைப்பகுதி பெய்த மழையால் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டாறு வெள்ளப்பெருக்கு மலைக்கிராம மக்களை பீதி அடைய செய்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக காலை முதல் இரவு வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், கடம்பூர் அடுத்த குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் மழை பெய்தால் கடம்பூர் - மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர் பள்ளம் மற்றும் சக்கரை பள்ளம் என இரு பள்ளங்களிலும் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
மேலும், மழை காலங்களில் இரு பள்ளங்கள் வழியாக காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, மாக்கம்பாளையம் மலைக்கிராம மக்களின் அன்றாட தேவைகளும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் சேறும் சகதியுமாக உள்ளதோடு, இரு பள்ளங்களில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனிடையே, நேற்று (15ம் தேதி) மதியத்திற்கு மேல் பெய்த கனமழையால் மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு அருகேயுள்ள அருகியம் புதூர் ஒட்டிய வனப்பகுதியில் மழைநீர் காட்டாறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை வெள்ள நீரானது குரும்பூர் மற்றும் சக்கரை பள்ளங்களை இணைக்கும் பகுதியில் கலங்கிய வெள்ள நீராக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், மலைக்கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
இக்காட்டாறு வெள்ளத்தை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும், சத்தியமங்கலம் வழியாக கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் பேருந்து போக்குவரத்து நான்கைந்து நாளாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் மலைக்கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.