அந்தியூரில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் உற்பத்தி உபகரணம்
அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை அமைச்சர் முத்துச்சாமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு, அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் பர்கூர் மலை கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கடந்த கொரோனா காலகட்டத்தில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை தொடர்ந்து தலைமை மருத்துவர் கவிதா ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடிய உபகரணங்கள் தேவை என பல்வேறு தன்னார்வ அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் சங்கத்தினர் இலவசமாக 25.50 லட்ச ரூபாய் செலவில் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய உபகரணங்களை வழங்கினார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று அந்தியூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தார்.
ஆக்சிசன் உற்பத்தி செய்யும் ஆலையை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ஆக்சிசன் அறையில் 24 மணி நேரமும் 20 நோயாளிகளுக்கு இடைவிடாது ஆக்சிஜன் கிடைக்கும் எனவும் இனி வரும் காலங்களில் அந்தியூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நிலையே இல்லை என பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.