எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல: கவனத்தை ஈர்க்கும் ஈரோடு யான் அறக்கட்டளை

ஈரோடு மாவட்டம் பெருந்தலையூர் ஊராட்சியில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, வேட்பாளரை அறிவோம்' என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஈரோடு யான் அறக்கட்டளை.

Update: 2024-04-08 07:00 GMT

பெருந்தலையூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் 'இந்த வீட்டில் வாக்குக்கு லஞ்சம் பெறமாட்டோம்' என்ற வாசகத்தை யான் அறக்கட்டளை குழுவினர் ஒட்டியுள்ளனர்.

பெருந்தலையூர் ஊராட்சியில் ‘எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல,  வேட்பாளரை அறிவோம்' என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ஈரோடு யான் அறக்கட்டளை.

இது குறித்து ஈரோடு யான் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் கிருஷ்ணன் கூறியதாவது:-

யான் அறக்கட்டளை என்பது ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக இயங்கும் ஒரு அரசியல் சார்பற்ற தன்னார்வ அமைப்பு. இது நடத்தும் அறக்கல்வியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் நாங்கள்.

ஓட்டுப்போட பணம் பெறுவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடம் பிடிக்கும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க ஈரோட்டில் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல", "வேட்பாளரை அறிவோம்" ஆகிய இரு கொள்கைகளை முன்வைத்து பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். இதே கோரிக்கையை அரசியல் கட்சிகளிடமும் முன் வைத்துள்ளோம். ஈரோடு மாவட்டம் பெருந்தலையூரில் தீவிர பிரசாரம் செய்கிறோம். இந்த ஊரில் சுமார் 2500 வாக்குகள் உள்ளன. இது திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உள் வருகிறது.


ஒரு போர் நிறுத்தப் பகுதி போல லஞ்ச நிறுத்தப் பகுதியாக இந்த பெருந்தலையூரை விட்டுவிடுங்கள் என கோரிக்கை விடுத்திருக்கிறோம். அனைத்து வேட்பாளர்களையும் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்தோம். பெருந்தலையூரில் அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தினோம். வீடு வீடாக சென்று பரப்புரை செய்து வருகிறோம், ஒவ்வொரு வீட்டுக்கும் முன் மக்கள் ஒப்புதல் உடன் "இந்த வீட்டில் வாக்குக்கு லஞ்சம் பெற மாட்டோம் என விளம்பர ஸ்டிக்கர் ஒட்டி விட்டோம், சாலைகளில் எழுதி உள்ளோம். விளம்பர தட்டிகள் வைத்துள்ளோம். நேர்மையான தேர்தல் கருத்தை பெற கோலப் போட்டி நடத்தி உள்ளோம்.

ஒவ்வொரு வாக்காளர் இடமும் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என ஒரு உறுதிமொழிப் பத்திரத்தில் கையொப்பம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தெரு முனைகளில் அறிவிப்பு பலகைகள் வைக்க இருக்கிறோம், சாமான்ய வாக்காளர்களை படம் பிடித்து கட் அவுட் வைக்க உள்ளோம். நேர்மையான தேர்தலை நோக்கி என்கிற அலங்கார நுழைவு ஒன்றின் ஒரு பகுதியை அமைக்க இருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்த விளைவு ஏற்பட்டால் தேர்தலுக்கு பின் இந்த அலங்கார நுழைவை பூர்த்தி செய்யும் திட்டம் உள்ளது.


இந்த பெருந்தலையூர் ஊராட்சியை நேர்மையின் நோக்கில் இந்தியாவுக்கே முன்மாதிரி என மாற்ற மக்களுடன் தீவிரமாக முயற்சித்து வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News