ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க விரைவு சேவை குழு அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளுக்கு விரைவு சேவை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 2024ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளவும், வெள்ளம், பருவமழை போன்ற பேரிடர் காலங்களில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மூலம் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை தாழ்வான தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் கட்ட கூடாது. உயரமான பகுதிகளில் கொட்டகையில் கட்டவேண்டும்.
மின்கம்பங்களில் கால்நடைகளை கட்ட கூடாது. இதன் மூலம் மின்சாரத்தினால் ஏற்படும் கால்நடைகளின் இழப்பை தவிர்க்கலாம். இடிந்த வீடுகள் கொட்டகைகள் ஆகியவற்றில் கால்நடைகளை அடைக்கக் கூடாது. அதன் மூலம் அதிக மழை மற்றும் காற்றினால் கட்டிட இடிபாடுகளால் ஏற்படும் கால்நடை இழப்பை தவிர்க்கலாம். ஆற்று ஓரங்களில் கால்நடை கொட்டகை வைத்திருப்போர் கவனமுடன் இருக்க வேண்டும்.
இரவு நேரங்களில் ஆறுகளில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கால்நடைகளை அடித்து செல்ல நேரிடும். எனவே முடிந்தவரை கால்நடைகளை மழை மற்றும் குளிரினால் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலை தவிர்க்கலாம்.
இரவு நேரங்களில் கொசு மற்றும் ஈ தொல்லையிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க புகை மூட்டம் செய்வது சிறந்ததாக இருக்கும். இந்த பேரிடர் காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 14 கால்நடை அலுவலர்களை கொண்ட விரைவு சேவை குழுக்கள் மற்றும் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள், 6 கால்நடை மருத்துவமனைகள் சிகிச்சையளிக்க தயாராக உள்ளது.
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க கால்நடை பராமரிப்புத்துறை - அவசரகால தொடர்பு எண் 1962 மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநரின் கைப்பேசி எண் 9443546219 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது கால்நடைகளை இயற்கை இடர்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் மழைக்காலங்களில் கால்நடைகளில் இறப்பு ஏற்பட்டால் கால்நடை உதவி மருத்துவருக்கும், கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் அளிக்க வேண்டும். இறந்த கால்நடைகளை பாதுகாப்பாக சுண்ணாம்பு அல்லது பிளிச்சிங் பவுடர் போட்டு புதைக்க வேண்டும்.
இறந்த கால்நடைகளை ஆற்றிலோ, கிணற்றிலோ எறியக்கூடாது. அவ்வாறு எறிந்தால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த பேரிடர் காலங்களில் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் போதுமான அளவு மருந்துகள் மற்றும் தடுப்பூசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டு தயாராக உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.