கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு நாளை காலை 11 மணிக்கு தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நாளை (ஆகஸ்ட் 19) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.;

Update: 2023-08-18 14:58 GMT

பவானிசாகர் அணை (பைல் படம்).

பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக நாளை (ஆகஸ்ட் 19) காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 போகமாக மொத்தம், 2.07 லட்சம் ஏக்கர் கீழ்பவானி வாய்க்கால் மூலம் நேரடியாக பாசனம் பெறுகின்றன. கசிவு நீர் மூலம், 50,000 ஏக்கருக்கு மேல் மறைமுகமாக ஒவ்வொரு பருவத்திலும் பாசனம் பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை, தளம் அமைத்து, நவீன சீரமைப்புக்கு, 710 கோடி ரூபாய் ஒதுக்கி இரு தரப்பு விவசாயிகளாக திட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்ததால் பொதுப்பணித் துறையினர், ஆங்காங்கு பணிகளை செய்தனர்.

முதல் போக சாகுபடிக்கு ஆகஸ்ட் 15ல் கீழ்பவானியில் தண்ணீர் திறக்க வேண்டும் என இருதரப்பு விவசாயிகளும் வலியுறுத்தினர். இந்நிலையில், திட்டமிட்டபடி கடந்த 15ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது,  கீழ்பவானி வாய்க்காலில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர், திடீரென இரவு 7 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு, 5 கன அடியானது. 2 மணி நேர தண்ணீர் திறப்பிற்காக அரசாணை வெளியிட்டு, விவசாயிகளை அரசு ஏமாற்றியதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

அதனைத் தொடர்ந்து,  கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், வருகிற 20ம் தேதிக்குள் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு அரசு அறிவித்தவாறு தண்ணீர் திறக்காவிட்டால், வருகிற 22ம் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த நிலையில், நாளை 19ம் தேதி காலை 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கீழ்பவானி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி (எல்பிபி) வாய்க்கால் மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு நாளை (ஆகஸ்ட் 19) சனிக்கிழமை காலை 11 மணியளவில் 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் படி படியாக கால்வாயின் முழு கொள்ளளவு உயர்த்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வெளியாகியுள்ள இந்த அறிவிப்பிற்கு விவசாயிகள் மிகுந்த வரவேற்பளித்துள்ளனர்.

Tags:    

Similar News