ஈரோட்டில் தமாகா இளைஞரணி சார்பில், போதை பொருள் கையெழுத்து இயக்கம் தொடக்கம்

ஈரோட்டில் தமாகா இளைஞரணி சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கியது.

Update: 2023-05-27 02:00 GMT

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தமாகா இளைஞரணி சார்பில், தொடங்கிய கையெழுத்து இயக்கம்.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 17 பேர் பலியாகினர். எனவே தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று கூறி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவில் தமாகாவினர் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை கண்டித்தும், சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மது விற்பனைக்கு அனுமதி அளித்த தமிழக அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்கத்தை நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு தமாகா மாநில இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அரசை வலியுறுத்தி பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தமாகா கட்சியின் இளைஞரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் முதற்கட்டமாக திங்கட்கிழமை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், இளைஞர் அணி மத்திய மாவட்ட தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் மாயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News