களை இழந்த ஆடிப்பெருக்கு: பக்தர்களின்றி வெறிச்சோடியது பவானி கூடுதுறை..!
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ஆடிப்பெருக்கு நாளான இன்று (3ம் தேதி) பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரர் கோயில் வெறிச்சோடியது.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் ஆடிப்பெருக்கு நாளான இன்று (3ம் தேதி) பவானி கூடுதுறை மற்றும் சங்கமேஸ்வரர் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றிய வருவாய்த் துறையினர் அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் ஆடி பெருக்கு ஆகிய நாட்களில் பவானி கூடுதுறையில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். தற்போது காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதனால், ஆடிப்பெருக்கு நாளான (3ம் தேதி) இன்றும், ஆடி அமாவாசையான (4ம் தேதி) நாளையும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும், காவிரி கரை பகுதியில் குழாய் மூலம் காவிரி நதி நீர் தெளிப்பதற்கு திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும், ஆடிப்பெருக்கு நாளான இன்று (3ம் தேதி) பவானி கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் புனித நீராட வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோயிலுக்கு மிக சொற்ப அளவிலான பக்தர்களை வந்திருந்தனர். கூடுதுறை பகுதியிலும் மிகக் குறைந்த அளவிலே கூட்டம் காணப்பட்டது.
மூத்தோர் வழிபாடு செய்து பிண்டம் காவிரி ஆற்றில் கரைக்க சிரமப்பட்டனர். வழக்கமான அமாவாசை நாட்களை காட்டிலும் ஆடிப்பெருக்கு நாளான இன்று மிகக் குறைந்த அளவிலேயே கூட்டம் காணப்பட்டது. இதனால், பவானி கூடுதுறை வெறிச்சோடி காணப்பட்டது.