ஈரோடு: கொங்கு இயற்கை மருத்துவக் கல்லூரியில் தேசிய அளவிலான பயிலரங்கம்..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மற்றம் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய அளவிலான பயிலரங்கம் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றது.;
கொங்கு இயற்கை மருத்துக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான பயிலரங்க தொடக்க விழா நிகழ்ச்சியில் எடுத்த படம்.
பெருந்துறையில் உள்ள கொங்கு இயற்கை மற்றம் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய அளவிலான பயிலரங்கம் அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடிடூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட்டின் கீழ் இயங்கிவரும் கொங்கு இயற்கை மற்றம் யோகா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தினங்களில் தேசிய அளவிலான பயிலரங்கம் கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கொங்கு கன்வென்சன் சென்டரில் நடைபெற்றது.
இது பிரத்தியோகமாக பி.என்.ஒய்.எஸ் என்னும் இளநிலை மருத்துவப் படிப்பை படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கென்றே ஒரு பன்முகத் திறன் மேம்பாடு என்ற கருபொருளின் அடிப்படையைக் கொண்டு நடைபெற்ற பயிலரங்கமாகும். இந்நிகழ்வில் கொங்கு இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி உட்பட தேசிய அளவிலாக மொத்தம் 24 கல்லூரியைச் சேர்ந்த 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதுவரை நடைபெற்ற இயற்கை மற்றும் யோகா பயிலரங்கங்களில் தேசிய அளவில் இதுவே மிகப்பெரிய பயிலரங்கம் ஆகும்.
முதல் நாள் பயிலரங்கம் ஏப்ரல் 5ம் தேதியன்று காலை 10 மணி அளவில் தழிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் குத்துவிளக்கேற்றி தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் டாக்டர் பிரதாப்சிங் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் கல்லூரியின் தாளாளர் வெங்கடாச்சலம் தலைமையுரை ஆற்றினார். விழாவினை கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளர் இளங்கோ, கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் தங்கவேல், கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் தேவராஜா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் பழனிசாமி அனைவரும் விழாவிற்கு வருகை தந்த மாணவர்களை வாழ்த்தி பேசி சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் கெளரவவிருந்தினராக கோயம்பத்தூர் ஏஏடி ஹெல்த் டெக் பிரைவேட் லிமிடெட்-ன் இணை நிறுவனர் மற்றும் டாக்டர். கோல்ட் ஹெல்த் கேர் எல்எல்பியின் தலைமை நிர்வாகியுமான அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தங்கதுரை ராமசாமி ராஜீ கலந்து கொண்டு தான் அறுவை சிகிச்சை பயன்படுத்துவதை குறைத்து கொண்டதையும், இயற்கை மருத்துவத்தின் சிறப்பினையும், பலன்களையும், முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தின் இன்றைய தேவையையும் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்தாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனிப்பட்ட அமைதியின் மூலம் உலகளாவிய அமைதி என்ற கொள்கையை பின்பற்றி வரும் திருமூர்த்திமலையில் அமைந்திருக்கும் யுனிவர்சல் பீஸ் பவுண்டேசன் என்ற அமைப்பின் நிறுவனர், அமைதிக்கான தூதர், புனிதர் குருமகான் அமைதியின் முக்கியத்துவத்தையும் அதில் பி.என்.ஒய்.எஸ் மருத்துவத்தின் சிறப்பை குறித்தும் தனது சிறப்புரையில் விளக்கமாக விவரித்தார். தொடக்க விழாவின் நிறைவாக துணை முதல்வர் டாக்டர் ராஜரத்தினம் நன்றியுரை வழங்கினார்.
பின்னர் டாக்டர் மருதராஜ் பயிலரங்கத்தின் பகுதியாக தனது முதல் உரையின் மூலம் பல்துறை மருத்துவமனையில் இயற்கை மருத்துவத்தின் ஒருங்கிணைப்பை குறித்து உரையாற்றினார். தொடர்ந்து டாக்டர் எழில்மாறன் அவர்கள் வெளிபுற நோயாளிகள் முதல் உள்புற நோயாளிகள் வரை சொந்தமாக மருத்துவமனை ஆரம்பித்து வெற்றிகரமான நடத்துவது குறித்தும், டாக்டர் பிரதீப் எம் கே நாயர் மற்றும் டாக்டர் தனன்ஜெய் வி அரன்கல் இருவரும் புதிய படைப்புகளின் மேம்பாடுகளை வழி நடத்துதல் மற்றும் ஆராய்ச்சி முறைகளில் தேர்ச்சி பெறுதல், தேசிய இதழ்களில் கட்டுரைகள் வெளியிடுதல் ஆகியவற்றை குறித்தும் முதல் நாள் பயிலரங்கத்தில் பேசினார்கள்.
பின்பு மாலையில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் டாக்டர் வேணுகோபால் வளர்சிதை மாற்று பிரச்சனைகளின் பி.என்.ஒய்.எஸ் மருத்துவர்களின் திறனை மேம்படுத்துதல் குறித்து விளக்கினார். டாக்டர் ராகவேந்திரசாமி நாடி மூலம் நோய் கண்டறிதல் குறித்தும், டாக்டர் அச்சுதன் ஈஸ்வர் இயற்கை மருத்துவ உணவு முறைகளை வைத்து தொழில் துவங்குவது குறித்தும் விளக்கமாக விவரித்தார்கள்.
ஓண் யுவர் குரோத்தின் நிறுவனர் டாக்டர் பாவித் பன்சால் பயிலரங்கத்தை குறித்த கருத்துக்களை மாணவர்களிடத்திலிருந்து கேட்டறிந்தார். இரண்டாம் நாள் மதியம் நிறைவு விழா நடைபெற்றது. கல்லூரியின் துணை பேராசிரியர் டாக்டர் கார்திப் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டில் அமைந்துள்ள தேசிய யோகா மற்றும் இயற்கை அறிவியல் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டார்.
அவர் தனது உரையில், இயற்கை மருத்துவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை குறித்தும் உடல் பருமன் போன்ற நோய்களை சரியாக புரிந்துகொள்ளுதல் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்றவை குறித்து தெளிவாக விவரித்தார். கௌரவ விருந்தினராக சேலம் சிவராஜ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து பேசினார். இறுதியாக பயிலரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்து கல்லூரிகளையும் பாராட்டி நினைவுப்பரிசு மற்றும் பங்குபெற்ற கல்லூரிகளில் இறுதியாண்டில் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி விருதும் கல்லூரி தாளாளர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்திருந்த கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ட்ரஸ்ட்டின் தலைவர் டாக்டர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி அவர்கள், பொருளாளர் ரவிசங்கர் ஆகியோர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.