தாளவாடியில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை துவக்கி வைத்த எம்பி
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண சேவையினை ஆ.ராசா எம்பி தொடங்கி வைத்தார்.;
தாளவாடியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த நீலகிரி எம்பி ஆ.ராசா.
தாளவாடி மலைப்பகுதியில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண சேவையினை ஆ.ராசா எம்பி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆ.ராசா எம்பி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, தாளவாடி பேருந்து நிலையத்தில் இருந்து சூசையபுரம் அருள்வாடி மற்றும் அரசு கல்லூரி வழியாக பனஹள்ளி வரை உள்ள மலை கிராமங்களை சேர்ந்த பெண்கள் பயன்பெறும் வகையில் முதன் முறையாக கட்டணமில்லாத இலவச மகளிர் பேருந்தை நீலகிரி எம்பி ஆ.ராசா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் கட்டப்பட்ட 2 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குளிர்பதன கிடங்கை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து ஆசனூர் டிஎப்ஓ ஆபிஸில் ஓட்டுநர் பயிற்சி நிறைவு செய்த 15 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமமும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் தேனீ வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி நிறைவு செய்த 21 பழங்குடியினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களும், காளான் வளர்ப்பு நிறைவு செய்த 8 பழங்குடியினருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களும், பழங்குடியின கிராமங்களில் வசிக்கும் முப்பத்திரெண்டு பழங்குடி குடும்பத்தினருக்கு விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் நல்லசிவம், தாளவாடி ஒன்றிய செயலாளர்கள் சிவண்ணா, நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.