விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள்: பேரவையில் சிரிப்பலை
ஈரோட்டுக்காரர்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
ஈரோட்டுக்காரர்களுக்கு சவுகரியமாக இருக்கும் வகையில் சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் சங்ககிரி பக்கம் நகர்த்தி வையுங்கள் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அந்த அறிவிப்பில், ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையமும், திருச்சியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமும் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, சட்டசபையில் பாமக உறுப்பினர் அருள், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, பாமக உறுப்பினர் அருள். சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
அது ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால், சேலம் விமான நிலையத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால், 6 மாதம் ஓடும். அதன் பிறகு நின்றுவிடும். காரணம் நிறைய பேர் வருவதில்லை என்பதுதான். என்னை பொறுத்தவரையில் அது பயன் உள்ள விமான நிலையமாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அதை கொஞ்சம் நகர்த்தி ஈரோட்டிற்கும், சேலத்திற்கும் நடுவில் வைத்தால் நன்றாக இருக்கும்.
விமானம் நிலையம் இப்போது ஓமலூரில் தான் இருக்கிறது. சேலத்தில் இருந்து ஒமலூருக்கு செல்ல அரை மணி நேரமோ , ஒரு மணி நேரமோ ஆகும். அதை நகர்த்தி சங்ககிரியில் வைக்கப்பட்டால் நாமக்கல்லும் அதை உபயோகப்படுத்த முடியும். திருச்செங்கோடும் அதை உபயோகப்படுத்த முடியும். கொங்கு மண்டலத்தில் இருக்க கூடிய பாதி ஏரியாவை அது உள்ளடக்கிவிடும்.
குறிப்பாக, எங்கள் ஈரோட்டுக்காரர்களுக்கு சவுகரியமாக இருக்கும். இதை பரந்த எண்ணத்துடன் நீங்கள் (பாமக எம்எல்ஏ அருள்) அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது