ஈரோடு போலீசாருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் முத்துசாமி வழங்கினார்
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார்களுக்கு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து போலீசார்களுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட எஸ்பி; தங்கதுரை தலைமை தாங்கினார். தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு, ஈரோடு மாவட்ட போலீசாருக்கு அரிசி மற்றும் முகக்கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முன்கள பணியாளர்களுக்கு என, தனியாக 10 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 289 போலீசார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி குறைந்த அளவே வந்துள்ளது. எனவே மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களுக்கு முக்கியதுவம் அளித்து, தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமையில் கொரோனா நோயாளிகள் உட்பட அனைவரும் ஒரே வழியை பயன்படுத்துவதால், மற்றவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா நோயாளிக்கென தனி வழிகள் மற்றும் தனிவார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.