காலில் காயத்துடன் நடமாடிய குரங்குக்கு சிகிச்சை
ஊஞ்சலூர் அருகே, காசிபாளையம் பகுதியில், காலில் காயத்துடன் திரிந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.;
காலில் காயத்துடன் கிடந்த குரங்கு
ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப்பள்ளி அருகே குரங்கு ஒன்று காலில் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் காசிபாளையம் பகுதி வனக்காப்பாளர் கீர்த்தனாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து அவர் மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று, மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு சாக்குப்பையில் போட்டனர். பின்னர் அருகே உள்ள கொம்பனைப்புதூர் அரசு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவகுமார் ஆகியோர் குரங்கை பரிசோதித்து பார்த்தனர்.
அதில் அந்த காலில் முயலுக்கு வைக்கப்படும் கண்ணி ஒயர் இறுக்கிய நிலையில் இருந்துள்ளது தெரியவந்தது. உடனே டாக்டர்கள் அதை அகற்றி குரங்குக்கு சிகிச்சை அளித்தனர். இதில் குரங்கு குணமானதை தொடர்ந்து அதற்கு மருத்துவமனையிலேயே பழம், தண்ணீர், போன்றவை கொடுக்கப்பட்டது. பின்னர் வனக்காப்பாளரும், ஓய்வுபெற்ற வனக்காப்பாளர் சிவலிங்கமும் குரங்கை பாதுகாப்பாக அங்கிருந்து எடுத்து சென்றனர்.