மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2021-06-08 06:06 GMT

மண் கடத்தல் லாரியை கவிழ்த்து, அதிகாரியை கொலை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட, கொடுமுடி பி.எஸ்.என்.எல்  அலுவலகம் அருகேயுள்ள பகுதி. 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாமரைப்பாளையம் பகுதியில்,  இன்று ஈரோடு கனிமவள ஏ.டி சத்தியசீலன், உதவி புவியியலாளர் ஜெகதீஷ்,  ஆர்.ஐ. சிலம்பரசன் ஆகியோர், வாகனத்  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரியை நிறுத்தி,  சோதனை செய்தனர்.

அந்த லாரியில், அனுமதியின்றி கிரேவல் மண் எடுத்து வந்தது தெரிய வந்தது. உடனே அந்த லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரியை போலீஸ் ஸ்டேசன் கொண்டு வருவதற்காக,  ஆர்.ஐ.சிலம்பரசனை லாரியில் ஏற்றி விட்டு, லாரியின் பின்னால் ஜீப்பில் அதிகாரிகள் வந்து கொண்டு இருந்தனர். ஏற்கனவே லாரியில் இருந்த பாபு (எ) கெளதம் லாரியை ஓட்டி வந்துள்ளார். கொடுமுடி பி.எஸ்.என்.எல் ஆபீஸ் அருகில் வரும்போது வேண்டுமென்றே சாலையின் இடதுபுறம் லாரியை பள்ளத்தில் கவிழ்த்து விட்டு லாரியில் இருந்து குதித்து வெளியே வந்தார்.

வெளியில் வந்த டிரைவர் கெளதமை, ஜீப்பில் வந்த அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது, அவர்களை மிரட்டி தாக்க முயற்சி செய்து விட்டு,  முட்புதருக்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். லாரியின் உள்ளே இருந்த ஆர்.ஐ.சிலம்பரசன் வண்டி கவிழ்ந்த விபத்தில் லேசான காயங்களுடன் தப்பினார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார்,  விரைந்து வந்து தப்பியோடிய பாபு என்கிற கௌதமை தேடி வருகின்றனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தேடப்பட்டு வரும் கெளதம் சிறு வயதிலேயே கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சமீபத்தில், ஒரிரு ஆண்டுகள் முன்பு வெளியே வந்தவர் என்பதும், சிறையில் இருந்து வந்த பின்பு லாரி வைத்து தொழில் செய்து வருவது தெரிய வந்தது.

மண் கடத்தல் குறித்து விசாரிக்கச் சென்ற அதிகாரியை கொலை செய்யும் நோக்கில், கடத்தல் நபர் லாரியை கவிழ்க்க முயன்ற சம்பவம், கொடுமுடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News