தந்தையை மிஞ்சும் தனயனாக ஸ்டாலின் விளங்குகிறார்: அமைச்சர் துரைமுருகன்
தந்தையை மிஞ்சும் தனயனாக ஸ்டாலின் விளங்குகிறார் என திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.;
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேர்தல் பணி குறித்து திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் ஆய்வு செய்தார். பின்னர், அமைச்சர்கள் முத்துச்சாமி, கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், காந்தி, சிவசங்கர் ரகுபதி, மெய்யநாதன், கீதாஜீவன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நாட்டிலேயே சிறந்த முதல்வராக திறம்பட பணியாற்றி வருகிறார். கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் டெல்லி சென்று பிரதமர்களை சந்தித்து எத்தனையோ திட்டங்களையும் உரிமைகளையும் பெற்று தந்தார். ஆனால் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் இங்கிருந்தபடியே டெல்லியை ஆட்டி படைக்கிறார். தந்தையை மிஞ்சும் தனயனாக ஸ்டாலின் உள்ளார்.
இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். குறைந்தபட்சம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இதற்காக திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளர்களின் வீட்டுக்கு நேரடியாக சென்று அவர்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கருணாநிதிக்காக மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், கருணாநிதி தனது எழுத்துக்களால் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பாடுபட்டுள்ளார்.
அவரின் பேனாவுக்கு வலிமை ஜாஸ்தி. அண்ணாவே அவரது எழுத்துக்களை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட பேனாவை பாக்கெட்டுக்குள் வைப்பது சரியல்ல. அதை நினைவு சின்னமாக கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை என்றார்.