கலைஞர் மக்கள் சேவை முகாம்: சென்னிமலையில் நலத்திட்ட உதவிகள்
சென்னிமலை அருகே நடைபெற்ற கலைஞா் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 551 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினாா்;
சென்னிமலை அருகே நடைபெற்ற கலைஞா் மக்கள் சேவை முகாமில் தோ்வு செய்யப்பட்ட 551 பயனாளிகளுக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாமிநாதன் புதன்கிழமை (இன்று) வழங்கினாா்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், கணுவாய் - அம்மன் காட்டேஜ், பசுவபட்டி அருகில் கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர், அவர் தெரிவித்ததாவது, சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முகாசிபிடாரியூர், முருங்கத்தொழுவு, எக்கட்டாம்பாளையம், குப்பிச்சிபாளையம், பசுவபட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஓட்டப்பாறை, புதுப்பாளையம், பாலத்தொழுவு, எல்லைகிராமம் மற்றும் கொடுமணல் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாம்களில் சுமார் 3,245 மனுக்கள் வரப்பெற்றதில் முகாம் நடைபெற்ற அன்றே 1,268 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், தற்போது 551 மனுதாரர்களுக்கு நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளும், இணையவழி பட்டா மாறுதல் ஆணைகளும், அமைப்பு சாரா நல வாரிய அட்டைகளும், ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் மருத்துவ காப்பீட்டு அட்டைகளும், ரூ.12.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
தகுதியுள்ள மனுக்களுக்கு தொடர்புடைய அரசு அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் வழங்கப்படும். மேலும், இப்பகுதியில், நடைபெற்ற கலைஞர் மக்கள் சேவை முகாமில் நிறைவு பெற்ற மீதமுள்ள பகுதிக்கான தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் விரைவில் வழங்கப்படவுள்ளது என்றார்.
தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.02 கோடி மதிப்பீட்டில் 30 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழுத் தலைவர் பத்மநாபன், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்ரி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை வட்டார அலுவலர்கள் பாஸ்கர்பாபு, கல்பனா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.