ஈரோடு: சாலை விரிவாக்க பணியை ஆய்வு செய்த அமைச்சர் முத்துசாமி

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் குறித்து அமைச்சர் முத்துசாமி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-04-04 12:15 GMT

ஈரோடு ஆர்.கே.வி. சாலை, காவேரி சாலை பகுதியில் சத்தியா வே பிரிட்ஜ் முதல் நகர காவல் நிலையம் வரை உள்ள சாலையின் எல்லை வரை, சாலை விரிவாக்கம் செய்து, வடிகால் வசதி மற்றும் நடைபாதை அமைப்பது குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ஆர்கே.வி ரோடு, காவேரி சாலை, கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி சாலை விரிவாக்கப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் நேரில் சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொண்டார்.


போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் நெடுஞ்சாலை துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு நகர மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சத்யா வே பிரிட்ஜ் முதல் நகர காவல் நிலை வரை 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைத்துறை சொந்தமான எல்லை வரை சாலை விரிவாக்கம், வடிகால் வசதி மற்றும் நடைபாதை அமைக்கப்படவுள்ளது. அதற்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக ஆர்.கே.வி ரோடு பரணி சில்க்ஸ் அருகிலுள்ள மின்மாற்றிகளை இடம் மாற்றி அமைக்கப்படப்படவுள்ள இடங்களையும், நிலத்தடி மின்வடங்கள் அமைத்த பிறகு சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாகவும், மாற்றி அமைக்கப்படவுள்ள மின்கம்பங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தொடர்ந்து கருங்கல்பாளையம், காவேரி சாலை காந்தி சிலை மற்றும் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றி அமைக்கப்படவுள்ள நுழைவு வாயிலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு இதற்காக வரைபட அறிக்கையை விரைந்து தயாரித்து வழங்க அலுவலர்களுக்கு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், செயற்பொறியாளர் (ஈரோடு) மாதேஸ்வரன் (நெடுஞ்சாலைத்துறை), கண்காணிப்பு பொறியாளர் (மின்சார வாரியம்) செந்தில்குமார், நகர் நல அலுவலர் பிரகாஷ், உதவி இயக்குநர் (நெடுஞ்சாலைத்துறை) சரவணன், மண்டலக்குழுத் தலைவர்கள் பழனிசாமி (மண்டலம் -1) குறிஞ்சி. தண்டபாணி (மண்டலம்-4), உதவிப்பொறியாளர்கள் சேகர், பிரேமலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News