1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் முத்துசாமி

ஈரோட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

Update: 2024-10-10 11:00 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ஈரோட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி இன்று (10ம் தேதி) வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், பல்வேறு துறைகளின் சார்பில் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (10ம் தேதி) நடைபெற்றது. இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு மகளிர் திட்டம் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.12.40 கோடி மதிப்பீட்டில் நேரடிக் கடனுதவியும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.13.04 லட்சம் மதிப்பீட்டில் திருமணம், கல்வி, ஓய்வூதியம், மரண நிவாரண நிதி உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கினார்.


தொடர்ந்து, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை 8 பயனாளிகளுக்கு ரூ.3.56 லட்சம் மதிப்பீட்டில் வெங்காய சேமிப்பு கிடங்கு, தென்னை பரப்பு விரிவாக்கம், காய்கறி கல்பந்தல் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 35 பயனாளிகளுக்கு ரூ.37.96 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஆணைகளை வழங்கினார்.


அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.66 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களும், வேளாண்மைப் பொறியியல் துறை 2 பயனாளிகளுக்கு ரூ.64 ஆயிரத்து 450 மதிப்பீட்டில் தீவன புல் வெட்டும் கருவிகளையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 1,742 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.


மேலும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கல்வி கடனும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த 32 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.96 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசு தொகையினையும் என மொத்தம் 1,889 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் அவர் வழங்கினார்.


இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மனிஷ். என், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கஸ்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் இளங்கோ, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், தாட்கோ மேலாளர் அர்ஜுன், உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News