மார்ச் மாதத்திலேயே அத்திக்கடவு–அவினாசி திட்டம் தொடங்க வாய்ப்பு: அமைச்சர் முத்துசாமி
அத்திக்கடவு அவினாசி திட்டம் இந்த மாதத்திலேயே தொடங்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறி உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஒட்டி கோபி அருகே உள்ள ஓடந்துறையில் திமுக சார்பில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி நானூறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முன்கூட்டியே எழுப்பியிருந்தால் இது முன்கூட்டியே நிறைவேற்றப்பட்டிருக்கும்..
திமுக ஆட்சி வந்த பின்னர் தான் விவசாயிகளிடம் பேசி பிரச்சனை தீர்த்து தற்போது பணிகள் முடிந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால் தேர்தல் விதிமுறை காரணமாக இத்திட்டம் துவங்குவதில் சிறிது காலம் தாமதம் ஏற்பட்டு விட்டது. இந்த மாதத்திலேயே அத்திக்கடவு அவினாசி திட்டம் துவக்க வாய்ப்பு உள்ளது. தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனப்பகுதியில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்து கலெக்டரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். கடந்த 2021 முதல் கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தில் தனியார் இடத்தில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த தீயணைப்பு நிலையத்துக்காக கோபி அருகே உள்ள போலவாக்காலி பாளையம் அருகே காலியாக உள்ள இடத்தை தீயணைப்பு துறையினர் தேர்வு செய்தனர். இந்த இடத்தை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த இடம் தொடர்பான வரைபடத்துடன் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். பின்னர் கலெக்டர் உடன் கலந்து பேசி தீயணைப்பு நிலையம் வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். பேட்டியின்போது, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம், திமுக மாநில விவசாய அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.