காவிரி கரையோர வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரை வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.

Update: 2024-07-31 15:30 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையோரப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 41 இடங்கள் உபரிநீரால் பாதிக்கப்படும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி இன்று (31ம் தேதி) மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தண்ணீர் அதிகமாக வருதைக் கருத்தில் கொண்டு, மேட்டூர் அணை நிரம்பிய காரணத்தால், தண்ணீர் திறந்து விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கரையோரத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கரையோர பகுதிகள் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், துறையின் அலுவலர்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரும் நேரடியாக கரையோரப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுமார் 41 இடங்கள் உபரி நீரால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேவைப்படும் பகுதிகளில் முகாம்கள் அமைத்து, பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் நர்னவாரே மனிஷ் சங்கர்ராவ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், மாநகர அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News