ஈரோடு மாநகராட்சிக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள்: அமைச்சர் ஆய்வு..!
பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ஈரோடு மாநகராட்சிக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் முத்துசாமி வெள்ளிக்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார்.;
ஈரோடு மாநகராட்சி சோலார் பகுதியில் காய்கறி மளிகை சந்தை வளாகம் அமையவுள்ள இடத்தினை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ஈரோடு மாநகராட்சிக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் முத்துசாமி வெள்ளிக்கிழமை (இன்று) ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார், வ.உ.சி. பூங்கா மற்றும் கருங்கல்பாளையம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, அவர் தெரிவித்தாவது, கடந்த 13ம் தேதி (புதன்கிழமை) கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், ஈரோடு மாவட்டத்திற்கு ரூ.122.44 கோடி மதிப்பீட்டிலான 86 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், ரூ.22.42 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 3,156 பயனாளிகளுக்கு ரூ.25.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில், காய்கறி மளிகை சந்தை வளாகம் வ.உ.சி பூங்கா, ரூ.15 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் மற்றும் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், காவேரி ஆற்று முகப்பு மேம்படுத்தப்படுத்துதல், ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலகம் உள்ளிட்ட 9 புதிய திட்டங்களை அறிவித்தார்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் ஏற்கனவே 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.63.50 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாநகராட்சியின் மையப்பகுதியில் தினசரி காய்கறி சந்தை அமைந்துள்ளதால் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் கோரிக்கையின் படி சோலார் பகுதியில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் ரூ.20 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மொத்த காய்கறி கனிகள் மற்றும் மளிகை சந்தை வளாகம் அமைக்கப்படவுள்ளது.
இதனால் ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் பொதுமக்கள் வாங்கலாம். மாநகரப் பகுதிக்குள் கனரக போக்குவரத்து நெரிசல் குறையும். சுற்றியுள்ள கிராமப்புற விவசாயிகள் பெரும் அளவில் பயன் அடைவார்கள். இப்பணிகளை விரைவில் துவங்கி, முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி பூங்கா, ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது.
ஈரோடு மாநகர மக்களின் நீண்ட நாளைய கனவின்படி மேற்படி பூங்காவை உலக தரம் வாய்ந்த சுற்றுசூழல் பூங்காவாக அமைக்கும் பணி ரூ.15 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது ஈரோடு மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமைவதுடன் பசுமை புல்வெளிகளால் காற்று மாசுடைவது தடுக்கப்பட்டு சுற்றுசூழல் மேம்பாடு அடையும். இவ்வாறு பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியானது காவிரி நதியின் மேற்கு கரையில் 1.30 கி.மீ நீளத்தில் அமைந்துள்ளது. இம்மாநகராட்சிகு உட்பட்ட காவிரி ஆற்றின் கரைப்பகுதியில் சோழீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஆற்றுக்கு வரும் மக்களால் ஏற்படுத்தப்படும் கழிவுகளால் அப்பகுதி மிகவும் பாதிக்கப்படுவதுடன் காவிரி ஆறு மாசு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு சோழீஸ்வரன் கோவில் அருகில் காவிரி ஆற்றின் கரையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்குதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் ஆகிய பணிகளை ரூ.30 கோடியில் அமைக்கப்படவுள்ளது.
இப்பணி முழுமையாக முடிவுறும் பொழுது காவிரி ஆறு மாசுபடுவது தடுக்கப்படுவதுடன் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமையும். மேலும், சத்தி சாலையில் கனிராவுத்தர் குளம் பகுதியில் 13 ஏக்கர் பரப்பளவில் ஒரு பேருந்து நிலையம் அமையவுள்ளது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் அரசின் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். இதனால், ஈரோடு மாவட்டத்தின் முன்னேற்றம் மிகப்பெரிய அளவில் உள்ளது எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அப்துல் கனி ஜவுளி வளாகத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி 1ம் மண்டல குழு தலைவர் பழனிசாமி, மாநகர பொறியாளர் விஜயகுமார் உட்பட தொடர்புடையத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.