ஈரோடு மாவட்ட வளர்ச்சிப் பணிகள்; உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை
Erode news- ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் இன்று (17ம் தேதி) நடைபெற்றது.;
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து, துறை சார்ந்த உயர் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விகிதம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் வருகை, எண்ணும் எழுத்தும் திட்டம், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாடுகள், இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம், அரசு மருத்துவமனைகள் செயல்பாடு, பொது மருத்துவம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தொடர்புடைய துறை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் முத்துசாமி விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், பிறப்பு மற்றும் இறப்பு விகிதம், இளவயது கர்ப்பம், பிறப்பு பாலின விகிதம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பு, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக்கிடும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பூங்கோதை உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.