அந்தியூர் அருகே மினி லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்: இருவர் உயிரிழப்பு
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மினி லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.;
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள ஊசிமலை கிராமத்தை சேர்ந்தவர் சித்துமரி. இவருடைய மகன் சித்தலிங்கன் (வயது 21). இவர், நேற்று (திங்கட்கிழமை) அந்தியூரில் இருந்து ஊசிமலைக்கு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் ஒசூரான் (வயது 60) என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, பர்கூர் காவல் நிலையம் அருகே உள்ள ஆலமரத்து முடக்கு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த மினி லாரியும், இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சித்தலிங்கன் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து, படுகாயம் அடைந்த ஒசூரானை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். இந்த விபத்து ஏற்பட்டதும், மினி லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிவிட்டார்.
இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.