பேருந்தில் தவறிய மனநலம் குன்றிய பெண் குணமடைந்து குடும்பத்துடன் சேர்ப்பு
பேருந்தில் தவறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணை குணப்படுத்தி கோபி அட்சயம் அறக்கட்டளையினர் குடும்பத்துடன் சேர்த்தனர்.
பேருந்தில் தவறிய திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய பெண்ணை குணப்படுத்தி கோபி அட்சயம் அறக்கட்டளையினர் குடும்பத்துடன் சேர்த்தனர்.
திருப்பூர் மாவட்டம் விஜயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கவள்ளி (வயது 45). சிறு வயதில் இருந்தே மனநலம் குன்றிய இவர் தந்தையின் பராமரிப்பிலேயே வாழ்ந்து வந்துள்ளார். தந்தை காலமான பிறகு அக்கா திலகவதியின் அரவணைப்பில் இருந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது அக்காவுடன் பேருந்தில் கோயிலுக்கு சென்ற மாணிக்கவள்ளி செல்லும் வழியிலேயே வழிதவறி சென்றுவிட்டார்.
மனவளர்ச்சி குன்றியதால் கையில் செல்போன் இல்லாமல், தனது ஊர், முகவரி, தொடர்பு எண் ஏதுமின்றி எங்கு செல்வது என்று தெரியாமல் பயந்து போனார். நாளடைவில் உறங்க இடமின்றி சாலையோரங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் வசித்து வந்தார். வயிற்றுப் பசிக்காக யாசகம் பெற ஆரம்பித்தார். இவர் காணாமல் போன துயரத்தில் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும், செய்தித்தாளில் விளம்பரம் செய்தும், காவல் துறையிடம் தகவல் தெரிவித்தும் தேடிவந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம், ஒட்டர்கரட்டுபாளையம், பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணிக்கவள்ளி மீட்டு கோபிச்செட்டிப்பாளையம், மொடச்சூர் வாரச்சந்தை அருகில் உள்ள அட்சயம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருந்துவ ஆலோசனை, உடற்பயிற்சி, யோகா போன்ற பல்வேறு பயிற்சிகள் மூலம் சற்று முன்னேற்றம் கண்டார். இந்நிலையில் அட்சயம் அறக்கட்டளை சமூக வலைத்தள பக்கத்தில் இவரது பதிவை பார்த்த குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி கொண்டு அட்சயம் இல்லத்திற்கு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று மாணிக்கவள்ளியின் பிறந்த நாளை முன்னிட்டு, கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி தலைவர் நாகராஜ் முன்னிலையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பின்னர் குடும்பத்துடன் ஒன்று சேர்த்து வைக்கப்பட்டார். இந்நிகழ்வில், அட்சயம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.