ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில், இரண்டு நாட்களாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில், மொத்தம் 50,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பரவுவதை தடுக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் அனைவருக்கும் தடுப்பூசி எனும் இலக்குடன், இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாள்களாக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டபொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 883 மையங்களில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களாக காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணையாக மொத்தம் 50,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை பணியாளர்கள் 1,788 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். 100 நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.