சென்னிமலையில் தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழா: ஈரோடு ஆட்சியர் மரியாதை

Erode news- ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-10-04 09:15 GMT

Erode news- சென்னிமலையில் தியாகி கொடி காத்த குமரன் பிறந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

Erode news, Erode news today- சென்னிமலையில் தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 4-10-1904 ஆண்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் குமரன்.‌ இவர், தனது 28ம் அகவையில் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு திருப்பூர் மாநகரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக உயிர் நீத்தார். இதனால் திருப்பூர் குமரன் என்றும், கொடி காத்த குமரன் என்றும் அனைவராலும் அழைக்கப்பட்டார்.

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூர் மாநகரில் கொடி காத்த குமரனுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு, கொடி காத்த குமரனின் பிறந்த இல்லம் அரசின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  தமிழ்நாடு அரசின் சார்பில் தியாகி குமரன் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் 4ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று (4ம் தேதி) செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னிமலையில் கொடி காத்த குமரனின் 121வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தியாகி குமரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கொடி காத்த குமரனின் வாரிசு தாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செ.கலைமாமணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் மகேந்திரன் உட்பட வாரிசு தாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News