கொடுமுடியில் 80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன மேலாளர்
கொடுமுடியில் 80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கொடுமுடியில் 80 பேரிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி வடக்கு புது மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கிரெடிட் அக்சஸ் கிராம் லிமிடெட் நிறுவனத்தின் கோட்ட மேலாளர் பன்னீர்செல்வம் (வயது 38) என்பவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் எங்கள் நிறுவனத்தில் ஏழைப் பெண்களுக்கு சிறு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொடுமுடியில் இயங்கிய மதுரா மைக்ரோ நிதி நிறுவனம் எங்கள் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் கொடுமுடி கிளை மேலாளர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கோகுல் (வயது 27) இணைப்புக்கு பிறகும் பணியில் தொடர்ந்தார்.
இந்நிலையில் எங்கள் குழுவினர் கணபதிபாளையம், எம்.ஜி.ஆர் நகர், ஊஞ்சலூர், சாமிநாதபுரம், கொடுமுடி மையங்களில் தணிக்கை செய்த போது கோகுல் பல்வேறு வகையில் ரூ.27.49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். எனவே கோகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, கோகுல் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 80 பேர் மோசடி புகார் செய்துள்ளனர். 28 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இதில் 20 பேரிடம் விசாரித்து ஆவணங்களை பெற்றுள்ளோம்.
மீதி நபர்களிடம் ஆவணங்களை பெறும் பணி நடந்து வருகிறது. ஆவணங்கள் பெற்றவுடன் ஆதாரத்துடன் கோகுலை கைது செய்ய நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.