அந்தியூரில் ராட்டின உரிமையாளரிடம் ரூ.15.89 லட்சம் மோசடி செய்தவர் கைது

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் ராட்டின உரிமையாளரிடம் ரூ.15.89 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-09-17 13:00 GMT

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்.

அந்தியூர் குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் ராட்டின உரிமையாளரிடம் ரூ.15.89 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சபி (வயது 42). ராட்டின உரிமையாளர். இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற குருநாதசுவாமி கோயில் திருவிழாவில் ராட்டினம் அமைக்க வந்துள்ளார். அப்போது, கெட்டிசத்திரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 34) என்பவர் ராட்டினத்திற்கு இடம் பிடித்து கொடுத்துள்ளார். 

பின்னர், சபியும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்த பிரபாகரனும் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை ராட்டினத்தை நடத்தினர். இதனிடையே, தினமும் கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர் மாடசாமி ஆகியோர் வந்து சபியிடம் ராட்டினத்தில் வசூலான தொகையை வாங்கிச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், 11ம் தேதி  இரவு கார்த்திகேயன் வந்து வசூலான தொகையை எண்ணி பார்க்கையில் ரூ.15 லட்சத்து 89 ஆயிரத்து 830 ரூபாய் இருந்துள்ளது. இதனையடுத்து, கார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்து வருவதாக சபியிடம் கூறிவிட்டு சென்றவர் வரவில்லை. இதனால், சபி கார்த்திகேயனை தொடர்பு கொண்ட போது, செல்போன் சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இதனையடுத்து , கார்த்திகேயன் தலைமறைவானதும், ரூ.15.89 லட்சத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, பணம் மோசடி செய்த கார்த்திகேயன் மீது நடவடிக்கை கோரி சபி, அந்தியூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயனை தேடி வந்தனர். இந்த நிலையில், வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை அந்தியூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News