அந்தியூரில் வனக்கோயிலுக்கு சென்ற மகமேரு தேர்கள்: வழியில் வந்த சரக்கு வாகனம்
Erode News- ஈரோடு மாவட்டம் அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழாவையொட்டி, மகமேரு தேர்கள் வனக்கோயிலுக்கு செல்லும் போது, வழியில் வந்த சரக்கு வாகனத்தால் தேர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
Erode News, Erode News Today- அந்தியூர் குருநாதசுவாமி கோயில் ஆடித்தேர் திருவிழாவையொட்டி, மகமேரு தேர்கள் வனக்கோயிலுக்கு செல்லும் போது, வழியில் வந்த சரக்கு வாகனத்தால் தேர்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பாண்டு திருவிழா கடந்த 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதனையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித்தேர் திருவிழா இன்று (7ம் தேதி) காலை நடைபெற்றது. புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து, சப்பார தேரில் காமாட்சியம்மன் முன்னே செல்ல, ஒன்றன்பின் ஒன்றாக, சுமார் 60 அடி உயர மகமேரு தேரில், பெருமாள் மற்றும் குருநாதசுவாமி பின்னே சென்றன.
கோயில் மடப்பள்ளியில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வன கோயிலுக்கு, சுவாமிகளை பக்தர்கள் தோள்களில் சுமந்து சென்றனர். இந்நிலையில், தேர்களானது வனக்கோயிலுக்கு செல்லும் சாலையை அடைந்தது. அப்போது, எதிரே சரக்கு வாகனம் வந்ததாலும், சாலை குறுகலாக இருந்ததாலும் தேர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை இடது புறமாக இருந்த காலி இடத்தில் நிறுத்த முயன்றார். இதில், வாகனம் சேற்றில் சிக்கியது. இளசுகள் வாகனத்தை தள்ள முயன்றும், வாகனம் நகரவில்லை. அதனைத் தொடர்ந்து, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்தார். பின்னர், இயந்திரம் உதவியுடன் சரக்கு வாகனம் மீட்கப்பட்டு, தேர்கள் செல்லும் வழியில் இருந்து அகற்றப்பட்டது.
இதன் பின்னரே, தேர்கள் வனக்கோயிலுக்கு சென்றன. தேர்கள் செல்லும் வழியில் வந்த சரக்கு வாகனத்தால் தேர்கள் செல்வதில் சுமார் 20 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. இதனால், தேர்த்திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.