கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
கோபி அருகே டி.என்.பாளையத்தில் மின்சாரம் தாக்கி மக்னா யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையம் வனப்பகுதி புலிகள் காப்பக வனப்பகுதியில் என்பதால் புலிகள், காட்டுப்பன்றிகள், யானைகள், சிறுத்தை புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதியை ஒட்டிய தோட்டத்தில் விவசாயிகள் கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூரில் தனியார் பொறியியல் கல்லூரி அருகே எருமைக்குட்டை வனப்பகுதியை ஒட்டிய உள்ள தோட்டத்து மின் வேலியில் சிக்கி நேற்று காலை மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண் யானை) இறந்து கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர். பின்னர் யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, இறந்தது மக்னா யானை. அந்த யானைக்கு சுமார் 25 வயது இருக்கும். வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய யானை அருகே உள்ள தோட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளது. அப்போது அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது என்றனர்.
இதைத்தொடர்ந்து யானையின் உடலை மீட்ட வனத்துறையினர் அங்கேயே புதைத்தனர். மேலும், தோட்டத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளர் யார்?, மின்வேலியில் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்டதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.