ஈரோடு மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை: ரூ.4.06 லட்சம் பறிமுதல்..!
ஈரோடு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.4.06 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆத்துப்பாலம் அருகே சார்பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று (23ம் தேதி) மாலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வுக் குழு அதிகாரி ஜெகநாதன் தலைமையில், காவல் ஆய்வாளர் ரேகா மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் பசுபதி மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலையில் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சார்பதிவாளர் மற்றும் அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஒரேநாளில் சத்தியமங்கலம், அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4 லட்சத்து 6 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.