ஊட்டியில் இருந்து ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம், கல்லீரல்
Erode news- ஊட்டியில் இருந்து 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம், கல்லீரல் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது;
Erode news, Erode news today- ஊட்டியில் இருந்து 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட சிறுநீரகம், கல்லீரல் ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். தேயிலை பறிக்கும் தொழிலாளி. இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அங்கு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அர்ஜூனனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அவரது உடல் உறுப்புகளை பிறருக்கு பொருத்தும் வகையில் பாதுகாப்பாக எடுத்தனர். அர்ஜூனனின் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒரு பெண் உள்பட 2 நோயாளிகளுக்கு வழங்க அனுமதிக்கப்பட்டது.
நீலகிரியில் இருந்து ஈரோட்டுக்கு சாலை வழியாக வர போக்குவரத்து நெரிசல் இருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு வர சிரமம் ஏற்படும் என்பதால் காவல்துறையின் உதவியுடன் உடல் உறுப்புகள் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக முன்கூட்டியே நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட போலீசாருக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டன.
அதன்பேரில் போலீஸ் பாதுகாப்பு வாகன உதவியுடன் உடல் உறுப்புகள் பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டு கார் மூலம் 2 மணிநேரத்தில் ஈரோடு கொண்டு வரப்பட்டது. அங்கு கரூரை சேர்ந்த பெண்ணுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் உடல் உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
இதுகுறித்து, ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனை சிறுநீரக சிறப்பு நிபுணரும், இந்திய மருத்துவ சங்க ஈரோடு மாவட்ட தலைவருமான டாக்டர் டி.சரவணன் கூறியது, எங்கள் மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து உள்ளோம்.
இதற்கு காரணமான அர்ஜூனன் குடும்பத்தினருக்கும், பாதுகாப்பு பணி களை செய்த காவல் துறையினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.