கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்றவர் கைது‌: கிரைம் செய்திகள்..

ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-11-26 04:45 GMT

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்ற சங்கரா என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை விற்றவர் கைது‌:- 

தமிழகம் - கர்நாடக மாநில எல்லையான தாளவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் விற்கப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மெட்டல்வாடி பகுதியில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக கர்நாடக மது பாக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த சங்கரா (40) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 36 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது:- 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி பகுதியில் பெருந்துறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையின் எதிரே உள்ள முட்புதரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. அதனையடுத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் எடப்பாடி சி.செல்லியாண்டிஅம்மன் கோவிலை சேர்ந்த ரமேஷ் (38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது:- 

கோபிசெட்டிபாளையம் போலீசார் ஒத்தக்குதிரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேக்கரி அருகே சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நின்றுகொண்டு இருந்த ஒருவரை பிடித்து, அவர் வைத்திருந்த சாக்கு பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் 2 கிலோ 450 கிராம் எடை கொண்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் ஓடத்துறை கவுண்டர் தோட்டம் தண்ணீர் பந்தல் புதூரை சேர்ந்த கார்த்திகேயன் (38) என்பதும், குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயனை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது :- 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் காசிபாளையம் மறுகரை என்ற பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து கொடுமுடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கம்பூர் பகுதியை சேர்ந்த துளசி மணி (65),.ஸ்ரீஜாதீன் (45) , சாகுல்அமித் (42), ஜெகதீஸ் (34), குமார் (59) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.950 ரூபாயை கைப்பற்றினர். கொடுமுடி போலீசார் 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News