கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளியாக ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளியாக ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூரில் உள்ள கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி இரவு தங்கி இருந்த நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்களான கோவிந்தராஜ், நாகப்பா, நாகேஷ் ஆகியோரை துப்பாக்கி முனையில் சந்தன மர கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் வனப்பகுதிக்குள் கடத்தி சென்றனர்.
இதுதொடர்பாக, தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரா கவுடா, சேதுமணி ஆகியோர் ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் நொச்சிக்குப்பம் பாப்பாயம்மாள் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ரமேஷ் என்கிற தமிழ் (வயது 57) என்பவர் சம்பவம் நடைபெற்றதில் இருந்தே கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த வழக்கு விசாரணை ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள தமிழ் என்பவரின் முகவரிக்கு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. ஆனாலும் போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 24 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள ரமேஷ் என்கிற தமிழை தலைமறைவு குற்றவாளியாக நீதித்துறை நடுவர் அப்சல்பாத்திமா அறிவித்தார்.
மேலும், அடுத்த மாதம் 10ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.