கோபிசெட்டிபாளையத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று (27ம் தேதி) நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் 30 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (27ம் தேதி) நடைபெற்றது. வாணிப்புத்தூர் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 20ம் தேதி துவங்கியது. அதனைத் தொடர்ந்து, இன்று (27ம் தேதி) நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, கோபி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று (27ம் தேதி) நடைபெற்றது.
வாணிப்புத்தூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராம பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 176 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, பெறப்பட்ட மனுக்களின் மீது விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகையும், 21 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவு ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 360 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும் அவர் வழங்கினார்.
மேலும், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூபாய் ஆயிரம் மதிப்பில் பசுந்தாள் உரவிதையினையும், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் தென்னையில் ஒருங்கிணைந்த கூட்டு மேலாண்மை தொகுப்பும், ஒரு பயனாளிக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க மானியமும் என மொத்தம் 30 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்து 360 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் வருவாய் வட்டாட்சியர் கார்த்திக், உதவி இயக்குநர் (நில அளவை) ஹரிதாஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.