அண்ணாமலையின் பதிவுக்கு நான் பதில் சொன்னால் சரியாக இருக்காது: ஈவிகேஎஸ் இளங்கோவன்
சமூக ஊடகங்களில் வெட்டியும், ஒட்டியும் வெளியாகும் வீடியோக்களை பொருட்ப்படுத்துவதில்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் வெட்டியும், ஒட்டியும் வெளியாகும் வீடியோக்களை பொருட்ப்படுத்துவதில்லை என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் சோஷியல் டெமாக்ரடிக் பீப்புள் ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சி, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எஸ்டிபிஐ கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அக்கட்சியின் அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கோரினார். அதை அடுத்து எஸ்டிபிஐ கட்சியினர் அவருக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்தனர். இதை அடுத்து இளங்கோவன் ஆதரவளிக்க முன் வந்த எஸ்டிபிஐ கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமாக பேசியதாக ஒரு ஆடியோ வெளியிட்டது குறித்து கேட்டதற்கு, அது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கெல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்றார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கட்சி கூட்டணிகளில் பல்வேறு கருத்துக்களை நான் தெரிவித்துள்ளேன். அதையும் வெட்டியும் ஒட்டியும் தற்போது சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். அதை நான் பொருட்படுத்தவில்லை. எனது தாத்தா பெரியார், தந்தை சம்பத், எனது மகன் திருமகன் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பல பணிகளை ஆற்றி உள்ளனர். அவர்கள் விட்டு சென்ற பணிகளை செய்வதற்கு தான் போட்டியிட ஒப்புக்கொண்டேன் என அவர் தெரிவித்தார். போட்டியின்போது, எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் லுக்மான் உட்பட பலர் உடன் இருந்தனர்.