கடம்பூரில் அகில உலக பெண் குழந்தைகள் தின விழா
சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் பரண் அமைப்பு சார்பில் அகில உலக பெண் குழந்தைகள் தினம் விழா கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பரண் டிரைபல் சொசைட்டி சார்பில், அகில உலக பெண் குழந்தைகள் தினம் இயேசு சபை சென்னை மறை மாநிலத் தலைவர் செபமாலை இருதயராஜ் தலைமையில் நடைபெற்றது.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் நிவேதா, பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய சட்ட விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளுக்கான தற்பாதுகாப்பு பற்றி விளையாட்டு மற்றும் பாடல்கள் மூலமாக வழி நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் குத்தியாலத்தூர், கூத்தம்பாளையம், குன்றி மற்றும் திங்களூர் ஊராட்சிகளில் இருந்து பரண் டிரைபல் சொசைட்டி நடத்தும் 55க்கும் மேற்பட்ட பரண் மாலை நேர அறிவாற்றலகங்களில் இருந்து 120 பழங்குடி ஊராளி பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர்.
அனைத்து பெண் குழந்தைகளும் இணைந்து அடையாள உறுதி மொழியாக, இடைநில்லாமல் பள்ளிக்குச் செல்வோம், 21 வயதிற்கு மேல் திருமணம் செய்வோம் என்றும், கட்டயமாக உயர்க்கல்வி பயில்வோம் என்றும் உறுதிமொழி எடுத்தனர்.
படிப்பின் மேன்மை, குழந்தைத் திருமணத்தின் தீமைகள் மற்றும் போதையினால் ஏற்படும் அழிவுகளையும் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்சிகளை பரண் கலைக்குழுவினர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரண் இயக்குனர்கள் உதயபிரகாஷ், கென்னடி, பரண் பணியாளர்கள் கோகுல், மாதேஷ், மதன், ரங்கசாமி, சகாயமேரி, லீமா, மகேஸ்வரி, புளோரா ஆகியோர் செய்திருந்தனர்.