நம்பியூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோட்டாட்சியர் ஆய்வு

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் கண்ணப்பன் வியாழக்கிழமை (இன்று) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-23 09:30 GMT

Erode news- முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கிய போது எடுத்த படம்.

Erode news, Erode news today- கோபி அடுத்த நம்பியூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர் கண்ணப்பன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள எம்மாம்பூண்டி கிராமத்தில் நேற்று பெய்த கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


நம்பியூர் வட்டம் எம்மாம்பூண்டி "ஆ" கிராமத்தில் நேற்று (மே.22) இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர் செல்லும் பகுதியில் வசித்த 52 குடும்பங்கள் (72 ஆண்கள், 51 பெண்கள், 13 குழந்தைகள் என மொத்தம் 136 நபர்கள்) பாதுகாப்பாக காந்திபுரம் மேடு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.

மேலும், மழைநீர் வடிந்து விட்ட காரணத்தால் முகாமில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு இன்று (மே.23) காலை உணவு, தேநீர், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுடைய இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவின் பேரில், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவ முகாமினை இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். தொடர்ந்து, நம்பியூர் காந்திபுரம் மேடு, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் காவல் துறையினரால் நிலைமை தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், தொடர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படா வண்ணம், மணல் மூட்டைகள் போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது, நம்பியூர் வட்டாட்சியர் மாலதி, நம்பியூர் பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News