ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் பணி செப்.15க்குள் முடிக்க அறிவுரை
ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் பணிகளை செப்.15க்குள் முடிக்க பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் பணிகளை செப்.15க்குள் முடிக்க பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் வெங்கடேஷ் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள்கள் உதிரி பாகங்கள் பொருத்தும் பணியினை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் தி.ந.வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கோபிசெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணாக்கர்களுக்கு தரமான உணவை, சரியான வேளைகளில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அறிவுரைகள் வழங்கினார்.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-2025ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் 5.47 லட்சம் மாணக்கர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 11ம் வகுப்பு பயிலும் 5,816 மாணவர்களுக்கும் 7,531 மாணவியர்களுக்கும் நடப்பாண்டில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணியினை செப்டம்பர் 15ம் தேதிக்குள் முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் 2023-2024ம் கல்வியாண்டில் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை கோரி 11,436 புதுப்பித்தல் விண்ணப்பங்களும், 5,472 புதிய விண்ணப்பங்களும் வரப்பெற்றுள்ளன. மேற்படி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்பளிக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 2022-2023ம் கல்வியாண்டில் பள்ளி கல்வி உதவித்தொகை கோரி வரப்பெற்ற 9,783 விண்ணப்பங்களும், 2023-2024 ஆம் கல்வியாண்டில் வரப்பெற்ற 9,546 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்பளிக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை கல்லூரி மற்றும் பள்ளி தொடர்பு அலுவலர்கள் உதவியுடன் முடித்திட அறிவுரைகள் வழங்கினார்.