பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,718 கன அடியாக சரிவு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,718 கனஅடியாக சரிந்தது.
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. அதேநேரம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் 76 அடிக்கும் கீழே சென்றது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. தற்போது, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது.
இன்று (ஜூலை 8-ம் தேதி) சனிக்கிழமை காலை 8 நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 78.62 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,718 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும் 1,205 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.