பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,431 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,351 கன அடியிலிருந்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.;
பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,351 கன அடியிலிருந்து 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையால் 2.70 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாகவும் உள்ளது.
இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து நேற்று (6ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,351 கன அடியாக இருந்த நிலையில், இன்று (7ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,431 கன அடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.97 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.78 அடியாக சரிந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 25.68 டிஎம்சியிலிருந்து 25.55 டிஎம்சியாக குறைந்தது.
மேலும், அணையில் இருந்து, பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கன அடி, அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 750 கன அடி, காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி, குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடி என மொத்தம் வினாடிக்கு 3,350 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.