பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,986 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,026 கன அடியிலிருந்து 3,986 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-08-11 04:00 GMT

பவானிசாகர் அணைப் பகுதி.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,986 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது ஆகும். இந்த அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக திகழ்கிறது. 

இவ்வணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 95 அடியை தாண்டியது. 

கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று (10ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,026 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (11ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,986 கன அடியாக அதிகரித்தது. 

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 95.77 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 95.76 அடியானது. அதேபோல், நீர் இருப்பு 25.54 டிஎம்சியிலிருந்து 25.53 டிஎம்சியானது. 

மேலும், அணையில் இருந்து அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 900 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,005 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News