மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,306 கன அடியிலிருந்து 1,468 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-05-21 10:54 GMT

பவானிசாகர் அணை (கோப்பு படம்).

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,306 கன அடியிலிருந்து 1,468 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்த அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணைக்கு, இன்று (மே.21) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,306 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 45.69 அடியாக இருந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நீர்வரத்து இன்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,468 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 45.86 ஆக உயர்ந்தது. தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News