கீழ்பவானி வாய்க்காலில் நீர்திறப்பு 1,100 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நீர்திறப்பு 500 கன அடியிலிருந்து 1,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் நீர்திறப்பு 500 கன அடியிலிருந்து 1,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணை ஆகும். 105 அடி நீர்மட்டம் உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இவ்வணை மூலம் கீழ்பவானி வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க்கால் வழியாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 2024-25 ஆண்டிற்கான முதல் போக பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று (17ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட நிலையில், இன்று (18ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 200 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 2,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், நேற்று காலை வினாடிக்கு 3,243 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 1,578 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.96 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 96.85 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 26.33 டிஎம்சி ஆனது. மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.