ஈரோட்டில் செயற்கை ஓடுதளத்துடன் கூடிய கால்பந்து மைதானம் திறப்பு
ஈரோட்டில் ரூ.7.57 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட செயற்கை ஓடுதளத்துடன் கூடிய மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
ஈரோட்டில் ரூ.7.57 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட செயற்கை ஓடுதளத்துடன் கூடிய மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2ம் தேதி) திறந்து வைத்தார்.
ஈரோடு வ.உசி. விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.7.57 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட புதிய செயற்கை இழை ஓடுதளத்தினை திறந்து வைக்கும் விழா இன்று (2ம் தேதி) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.7.57 கோடியில் புனரமைக்கப்பட்ட 400 மீ செயற்கை இழை ஓடுதள பாதையுடன் கூடிய கால்பந்து மைதானத்தையும், கல்வெட்டினையும் திறந்து வைத்தார்.
இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.