ஈரோடு தொகுதியில் 4ம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடக்கம்
Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 4ம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 4ம் தேதி முதல் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி தொடங்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் 21,805 எண்ணிக்கையில் 85 வயதுக்கு மேற்பட்டோரும், 9,824 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தபால் மூலம் வாய்ப்பு அளிப்பதற்கு ஏதுவாக படிவம் 12டி வழங்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 6 தொகுதியிலிருந்து தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 2,201 எண்ணிக்கையில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடமிருந்தும் 800 மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்தும் மொத்தமாக 3,001 படிவம் 12டி பெறப்பட்டது.
அதன்படி, குமாரபாளையம் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 292 பேரும், மாற்றுத்திறனாளிகள் 216 என மொத்தம் 508 பேரும், ஈரோடு கிழக்குத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 179 பேரும், மாற்றுத்திறனாளிகள் 49 என மொத்தம் 228 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 428 பேரும், மாற்றுத்திறனாளிகள் 104 என மொத்தம் 532 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 617 பேரும், மாற்றுத்திறனாளிகள் 193 என மொத்தம் 810 பேரும், தாராபுரம் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 446 பேரும், மாற்றுத்திறனாளிகள் 162 என மொத்தம் 608 பேரும், காங்கேயம் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்டோர் 239 பேரும், மாற்றுத்திறனாளிகள் 76 என மொத்தம் 315 பேரும் என் மொத்தம் 85 வயதுக்கு மேற்பட்டோர் 2,201 பேரும், மாற்றுத்திறனாளிகள் 800 என மொத்தம் 3,001 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேற்படி, வாக்காளர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் சார்பில் வாக்கு சேகரிக்கும் குழு அவர்களது முகவரிக்கு வரும் ஏப்ரல் 4, 5 மற்றும் 6ம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக சென்று தபால் வாக்குகளை வழங்கி வாக்களித்த பின் திரும்ப சேகரித்து எடுத்து செல்வார்கள். வாக்கு சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலர், ஒரு வாக்கு சேகரிக்கும் அலுவலர், நுண் கண்காணிப்பு அலுவலர், வீடியோகிராபர், சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர் மற்றும் ஆயுதமேந்திய காவலர் ஆகியோர் அடங்குவர்.
மேலும், சம்மந்தப்பட்ட தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களும் உடனிருந்து கண்காணிக்கலாம். முதல் முறை வாக்கு அளிக்க முடியாதவர்களுக்கு இரண்டாம் வாய்ப்பாக 8ம் தேதியன்று மேற்படி குழு அவர்களது முகவரிக்கு மீண்டும் சென்று வாக்கு சேகரிக்கும். எனவே, ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.