ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் 126 மனுக்கள்: உடனடி தீர்வுக்கு பரிந்துரை..!

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 126 கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (28ம் தேதி) உத்தரவிட்டார்.

Update: 2024-06-28 09:45 GMT

விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (28ம் தேதி) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழையளவு 733.44 மிமீ ஆகும். நடப்பு ஆண்டில் 28.06.2024 முடிய 246.4 மி.மீ பெய்துள்ளது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 61.27 அடியாகவும், 7670 மி.கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நடப்பாண்டில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகம் செய்வதற்காக நெல் விதைகள் 296 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 68 மெட்ரிக் டன்னும், பயறுவகைகள் 47.5 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துக்கள் 185 மெட்ரிக் டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.


ரசாயன உரங்களான யூரியா 7636 மெட்ரிக் டன்னும், டி.எ.பி 2448 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 2478 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 15427 மெட்ரிக் டன்னும் மற்றும் எஸ்.எஸ்.பி. 1045 டன்னும் இருப்பில் உள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. 2024-25-ஆம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டமானது தேர்வு செய்யப்பட்ட 42 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது.

இந்த ஊராட்சிகளில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றை சாகுபடிக்கு கொண்டுவந்து உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மைத்துறையின் மூலம் தரிசு நிலத்தொகுப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பொருட்டு நிலத்தடி நீர் ஆய்வு செய்யப்பட்டு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, நுண்ணீர் பாசன அமைப்பை நிறுவி பயிர்சாகுபடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கீழ்பவானி ஆயக்கட்டு பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் முதிர்ச்சியடைந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நெல் வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வட்டார மற்றும் துணை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன விவசாயிகள் இவற்றைப் பெற்று பயன்பெறலாம்.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான பூச்சி மருந்துகள் மற்றும் இரசாயன உரங்கள் போதுமான அளவு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து நிதியுதவி பெற முடியும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பி.எம்.கிசான் நிதி உதவி பெற்று வரும் வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதும் அவசியமாகும்.


இதுவரை ஆதார் எண்ணை சரிபார்த்து உறுதி செய்யாத விவசாயிகள் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து திட்டப்பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மானியக் கோரிக்கை 2024-25 இல், வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள், ஈரோடு மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) மகாதேவன், துணை இயக்குநர் (ஈரோடு விற்பனைக்குழு) சாவித்திரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜ்குமார், பிற துறைகளை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News